
வேலூர்
வாணியம்பாடியில் தனியார் குடிநீர் தொழிற்சாலைகளை மூடக்கோரி பத்து நாள்களாக போராடியும் நடவடிக்கை எடுக்காததால் சினம் கொண்ட மக்கள் குடிநீர் ஏற்றிச் சென்ற லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் கொல்லபல்லி என்ற இடம் உள்ளது.
இங்கு மூன்று தனியார் குடிநீர் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை மூடக்கோரி கடந்த 10 நாள்களாக மக்கள் போராடி வருகின்றனர்.
இந்த இடத்தில் கஞ்சித் தொட்டி திறந்தும், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டும், கோரிக்கை மனுக்களை அளித்தும், விவசாய கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் குடிநீர் தொழிற்சாலையில் இருந்து குடிநீர் கேன்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் புறப்பட்டன. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சாலையை மறித்து, லாரியின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து சிலர் லாரியில் இருந்த தண்ணீர் கேன்களை கீழே இழுத்துப் போட்டனர். சிலர் லாரியின் கண்ணாடிகளை கல்லை தூக்கி எறிந்து அடித்து நொறுக்கினர். மேலும் லாரி ஓட்டுநரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் சினம் கொண்ட மக்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் குடிநீர் தொழிற்சாலை உரிமையாளர் மீது புகார் அளித்தனர்.
அதனை காவலாளர்கள் வாங்க மறுத்ததால் காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரம், ஆய்வாளர் ராஜசேகர், தாசில்தார் முரளிகுமார் ஆகியோர் நேரில் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், மக்கள் குடிநீர் தொழிற்சாலகளை மூட வேண்டும், கொலை மிரட்டல் தொழிற்சாலை உரிமையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.