
நியமன எம்.எல்.ஏ.க்களை புதுவை சபாநாயகர் ஏற்க மறுத்ததை அடுத்து, குடியரசு தலைவர், பிரதமரிடம் முறையிடப் போவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் தீராத பனிப்போர் நிலவி வருகிறது. இதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சரிகளிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தார். பாஜக எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநர் கிரண்பேடி, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை முடக்கும் வகையில் செயல்படுகிறார் என்றும் ஜனநாயக நெறிமுறைகளை மீறி விட்டார் என்று கூறியும் மத்திய அரசின் செயல்பாடடைக் கண்டித்தும் காங்கிரஸ்,திமுக, இடதுசாரிகட்சிகள் முழு அடைப்பு போராட்டம் சனிக்கிழமை அன்று நடத்தியது. மேலும், நியமன பாஜக எம்.எல்.ஏ.க்களை, ஏற்க சபாநாயகர் வைத்தியலிங்கம் மறுத்துள்ளார்.
இந்த நிலையில், புதுவை ஆளுநர் கிரண்பேடி, சென்னை விமான நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செய்ததை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் குடியரசு தலைவரை சந்தித்து முறையிட உள்ளதாக கூறினார்.
இது குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை அன்று புதுவையில் நடந்த முழு அடைப்பின்போது பொது சொத்து சேதப்பட்டுள்ளதாகவும் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி முழுஅடைப்பின் போது ஏற்பட்ட பிரச்சனை பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், பிரச்சனைக்கு யார் காரணம் என்ற உண்மையை கண்டறியப்படும் எனவும் தெரிவித்தார்.