
மாட்டுககறி உண்ணும் போராட்டம் நடத்தி தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் சூரஜை, திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மிருக வதை தடைச் சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சென்னை ஐஐடியில் நேற்று முற்போக்கு மாணவர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தை நடத்தினர்.
இதில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சூரஜ் உள்ளிட்ட 4 ஆய்வு மாணவர்கள் மாட்டுக்கறி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று ஐஐடி வளாகத்தில் சூரஜ்ஜை சுற்றி வளைத்த 5க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாட்டுக்கறி திருவிழா நடத்தியதற்காக சூரஜ்ஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சூரஜ் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் படுகாயமடைந்த சூரஜ் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சூரஜ்ஜின் நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் சூரஜை, இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு திமுக எப்போதும் ஆதரவு அளிக்கும் என்று உறுதி அளித்தார்..