
சென்னை யானைக்கவுனியில் கடனை திருப்பிக் கொடுக்காத இளைஞரை கடத்தி கென்ற கும்பல் அவரின் சுண்டி விரலை வெட்டி எறிந்தது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் யானைக்கவுணியைச் சேர்ந்த தீபக் என்பவரிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
3 ஆண்டுகளாக கடனை திருப்பி கொடுக்காமல் ஸ்ரீனிவாசன் தீபக்கை இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஸ்ரீனிவாசன் யானைக்கவுணி வால்டாக்ஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது தீபக், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தீபக் தனது நண்பர் கார்த்திக் என்பருடன் சேர்ந்து ஸ்ரீனிவாசனை காரில் கடத்தி தீபக் தனது வீட்டில் அடைத்து வைத்து ஸ்ரீனிவாசனின் வலது கை சுண்டி விரலை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தீபக் ஸ்ரீனிவாசனை தனது நண்பர் கார்த்திக் வீட்டிற்கு கடத்திக் கொண்டு சென்று கட்டிப்போட்டு வைத்துள்ளனர்.
அங்கிருந்து தப்பி வந்த ஸ்ரீனிவாசன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இது குறித்து ஸ்ரீனிவாசன் யானைக்கவுணி காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலிசார் தீபக் மற்றும் கார்த்திக்கை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.