
‘மாட்டிறைச்சி திருவிழா’ நடத்தியது ஒழுக்கக்கேடானது; டீனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்….பா.ஜனதா தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனம்...
சிறந்த உயர்கல்வி நிலையமான ஐ.ஐ.டி.க்குள் மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியது தவறானது. பசுவதை தொடர்பான விஷயத்தில் ஆத்திரமூட்டும் செயல்கள் நடந்து வருகின்றன என்று பா.ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தடைக்கு எதிர்ப்பு
இறைச்சிக்காக மாடுகளைச் சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்ததில் இருந்து நாடுமுழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கேரளா, திரிபுரா, மேற்குவங்காளம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த தடைக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.
ஐ.ஐ.டி. மாட்டிறைச்சி திருவிழா
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் கடந்த 28-ந்ேததி மாட்டிறைச்சி திருவிழா நடத்தி, மாட்டிறைச்சி உண்டனர். இதில் ஒரு மாணவரை வலதுசாரி இந்து அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கொச்சியில்நிருபர்களுக்கு ேநற்று பேட்டி அளித்தார்.
கோரிக்கை
அப்போது அவர் கூறுகையில், “ இறைச்சிக்காக மாடு விற்பனை, வாங்குதலுக்கு தடை செய்தது தொடர்பாக மத்திய அரசுக்கு, பல மாநில அரசுகளும், அமைப்புகளும் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.
பரிசீலிக்கும்
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு முன்பே கூறியதைப் போல, அந்த கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கும். தேவைப்பட்டால், அந்த உத்தரவில் திருத்தங்கள் செய்யும். ஆனால், சிலர் ஆத்திரமூட்டும் செயல்களை செய்கிறார்கள்.
நடக்ககூடாது
சென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடந்தது?. சிறந்த கல்விக்கூடமான ஐ.ஐ.டி. டெல்லிஜவஹர்லால் பல்கலைக்கழகம் போல் ஆவதை அனுமதிக்க கூடாது. ஜவஹர்லால்நேரு பல்கலையில் தேசத்துக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதுபோல்இங்கும் நடந்துவிடக்கூடாது.
தவறானது
ஐ.ஐ.டி. வளாகத்துக்கு வெளியே மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டலாம், போராடலாம். அதில் தவறு இல்லை. அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், கல்விநிலையங்களில் அரசியல் செய்யும் நோக்கில், கீழ்தரமான செயல்களைச் செய்வது மிகவும் தவறானது.
சஸ்பெண்ட்
ஐ.ஐ.டி. கல்வி நிலையத்துக்குள் மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியது மிகவும் ஒழுக்கமற்ற செயல். மாணவர்களை இதற்காக அனுமதித்த மாணவர்களுக்கான டீனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.