வீடுத்தேடி சென்று விசிட் கொடுத்த முதலமைச்சர்..நெகிழ்ந்து போன மக்கள்..

Published : Feb 23, 2022, 03:12 PM ISTUpdated : Feb 23, 2022, 03:13 PM IST
வீடுத்தேடி சென்று விசிட் கொடுத்த முதலமைச்சர்..நெகிழ்ந்து போன மக்கள்..

சுருக்கம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கி,அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில்  கடந்த ஆண்டு ஆகஸ்ட மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 258 கோடி ரூபாய் செலவில் “மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் வடிவமைக்கப்பட்டு, களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல்,அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பரிந்துரைத்தல், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல், பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் வழங்கி கண்காணிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48” திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கி, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு இல்லம் தேடிச் சென்று மருந்து பெட்டகங்களை அவர் வழங்கினார்.

மேலும்  “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது கோவையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமுற்று பல மணிநேரம் அதிதீவிர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்த மோகன்குமார் என்ற கல்லூரி மாணவனிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து  கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ,அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 09 December 2025: மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..