
தமிழகத்தில் இப்போது நடக்கிற ஆட்சி மீதும், மத்திய பாஜக அரசு மீதும் மக்கள் அளவிடமுடியாத வெறுப்பில் உள்ளனர் என்றும், மத்திய மாநில அரசுகள் தான் தோன்றித் தனமாக செயல்படுவதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், மத்திய அரசு தங்களின் குறைகளை மறைக்க நாள்தோறும் புது புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை திசை திரும்புகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
கடந்த ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவித்து பொது மக்களை மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கினார்கள். தற்போது மாடிறைச்சிக்கு தடை போட்டுள்ளனர். தான் தோன்றித்தனமாக செயல்படும் இந்த அரசால் பொது மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார்.
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, கேரள மாநில சட்டசபையில் சிறப்பு தீர்மானம் போடுகிறார்கள். பிற மாநிலங்கள் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டிக்கிறது.
ஆனால் தமிழக முதலமைச்சர் நான் அந்த உத்தரவை படிக்கவில்லை. படித்து விட்டு சொல்கிறேன் என்கிறார். இன்னுமா அவர் படிக்கவில்லை? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு அளவிட முடியாத வெறுப்பு இருக்கிறது. இந்த இருகட்சிகளின் ஆட்சிக் காலமும் மக்களின் சோதனைக் காலமாக இருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்..