
தருமபுரி
அரூரில் அடித்த பலத்த சூறைக்காற்றுக்கு இரண்டு மரங்கள், இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. அனைவரும் மழை வரும் என்று எதிர்பார்த்த நேரத்தில் அவ்வப்போது மழை தூரல் மட்டுமே பெய்தது.
கொளுத்தும் வெயிலுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று காத்திருந்த மக்களுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென பலத்த காற்று வீசியது செம்மையா மழை பெய்யும் என்ற நம்பிக்கையைத் தந்தது. அதேபோன்று அன்றிரவு நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று காலை குளிர்ந்த நிலையிலே இருந்த அரூர் பகுதியில் மாலையில் பலத்த சூறைக்காற்று வீசியது.
அடித்த சூறைக்காற்றுக்கு சாலைகளில் நடந்துச் சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அருகே இருந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைகளில் ஒதுங்கி நின்றனர்.
சூறைக்காற்றின்போது அரூர் பை-பாஸ் சாலையில் இரண்டு மரங்கள் மற்றும் இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அப்போது அந்தப் பகுதியில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சாலையில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்ததால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.