
சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற தனியார் பஸ்சில் கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில் காவல் துறையினர் மூன்று பேரை கைது செய்தனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு கேபிஎன் சொகுசு பஸ், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்து இன்று காலை புறப்பட்டது. அதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, 5 பேர், கோவை செல்வதாகக் கூறி பேருந்தில் ஏறிக் கொண்டனர்.
பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த 5 பேரும் பயணிகளிடம் இருந்த உடைமைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
இதை கண்டு சுதாரித்து கொண்ட பயணிகள், மர்மநபர்களை தாக்க தொடங்கினர். இந்த சத்தம் கேட்டு டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். உடனே மர்மநபர்கள், தலை தெறிக்க பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.
இதில் ஒருவர் மட்டும் , பயணிகளிடம் மாட்டிக் கொள்ள மற்ற 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கொள்ளை முயற்சி வழக்கில் தப்பி ஓடிய 4 பேரில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.