
மதுபான கடைகளில் பார் அமைக்க உரிமம் வழங்குவதற்கான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் வழங்க ஆண்டுதோறும் டெண்டர் நடத்தப்படுகிறது. டெண்டரில் அதிக தொகை கேட்பவருக்கு மாவட்ட மேலாளரால் பார் உரிம அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
பார் உரிமம் வழங்க மதுபான கடையின் முந்தைய ஆண்டின் மாத சராசரி விற்பனை தொகையில் 2.5 சதவீதம் உரிம தொகையாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
இரண்டு மாத உரிம தொகை, வைப்பு தொகை, ஒரு மாத உரிம தொகை ஆகிய வற்றை, வங்கி வரைவோலையாக டாஸ்மாக் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
மொத்த தொகையில் 99 சதவீதம் அரசிற்கும் 1 சதவீதம் டாஸ்மாக்கிற்கும் வரைவோலை எடுக்க வேண்டும்.
இதனால் பார் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் விற்பனைக்கு ஏற்ப டெண்டர் விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும், அதிக கட்டணம் கொண்ட டெண்டரை ரத்து செய்ய கோரியும் 200 பார் உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
அதில் 2016 ல் அரசு வெளியிட்ட 2 டென்டரில் அதிகவிலை நிர்ணயிக்கபட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் மதுபான கடைகளில் பார் அமைக்க உரிமம் வழங்குவதற்கான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், புதிய டெண்டர் அறிவிப்பை 4 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.