எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீட்டை அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட முடித்து விட்டன. தொகுதி பங்கீட்டை முடித்துள்ள திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் 2024க்கான திமுக தேர்தல் அறிக்கையையும், வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், பேசிய முதல்வர் ஸ்டாலின், எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “நம்முடைய கூட்டணிக் கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமா கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். அதனால் நட்புணர்வோடு கலந்து தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம். சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில் இது இயல்பானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம்; தமிழ்நாட்டோட நலன் முக்கியம்; நாட்டோட எதிர்காலம்தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.
மக்களவைத் தேர்தல் 2024: ஈரோடு தொகுதியில் திமுக - அதிமுக நேரடி போட்டி - கள நிலவரம் என்ன?
மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளைக் கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும். ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு.
தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய – நகரம் - பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன். எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்பவே சொல்லி விடுறேன். இதை ரொம்ப கண்டிப்போடவும் சொல்லுறேன்.
எல்லா தொகுதியிலயும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். தோழமைக் கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும். போஸ்டர்கள், துண்டறிக்கைகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களுக்கும் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும்.
வேட்பாளர் யாராக இருந்தாலும் அரவணைத்து மக்களிடம் அழைத்துச் செல்லுங்கள். வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதுதான் ரொம்ப முக்கியம்! மக்களை நேரடியா சந்திக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும்.
இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களளை தமிழ்நாட்டில் விதைக்கலாம் என்ற எண்ணமே, இனிமே பாசிச வெறிபிடித்த பா.ஜ.க.வுக்கு கனவிலேயும் வரக்கூடாது. அப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை நாம் பெற வேண்டும். புதுவை உட்பட 40 தொகுதிகள்லயும் நாம தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி! ஜூன் 4-ஆம் தேதி வெற்றிச் செய்தியோட வந்து என்னைச் சந்தியுங்கள்!” இவ்வாறு அவர் பேசினார்.