மக்களவைத் தேர்தல் 2024: ஈரோடு தொகுதியில் திமுக - அதிமுக நேரடி போட்டி - கள நிலவரம் என்ன?

By Manikanda PrabuFirst Published Mar 20, 2024, 3:03 PM IST
Highlights

ஈரோடு மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுக - அதிமுக ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீட்டை அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட முடித்து விட்டன. தொகுதி பங்கீட்டை முடித்துள்ள திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதேபோல், அதிமுகவும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுக - அதிமுக ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த தேர்தலில் இந்த தொகுதி திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். இந்த முறை ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுகவே நேரடியாக களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளதால், அக்கட்சியும் நேரடியாக களம் காண்கிறது.

அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் என்பவரும், திமுக சார்பில் பிரகாஷ் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை திமுக வேட்பாளர் பட்டியலில் உதயநிதியின் ஆதிக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு குறைந்தபட்சம் 5 இடங்களையாவது கேட்டு வாங்கும் முடிவில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகவும், இளைஞரணியில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

அந்த வகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரகாஷுக்கு ஈரோடு மக்களவை தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு சிவகிரி அருகே உள்ள கானியம்பாளையம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். திமுக இளைஞர் அணியில் ஒன்றிய மற்றும் மாவட்ட அமைப்பாளர் என படிப்படியாக வளர்ந்து, தற்போது மாநில துணைச் செயலாளராக உள்ளார். எளிமையான அணுகுமுறையும், நிர்வாகத் திறமையும் கொண்ட பிரகாஷுக்கு, ஈரோடு தொகுதி முழுக்க திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் நன்கு அறிமுகம் உள்ளது.

மறுபுறம், அதிமுக வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார், சிவகிரி அருகே உள்ள கொடுமுடி புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு அண்மையில் வந்தவர். பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதும் அதிமுகவில் வந்து அசோக்குமார் ஐக்கியமான போதே, ஈரோடு தொகுதி அவருக்குத்தான் என்று உறுதியாகி விட்டதாக கூறப்பட்டது. அதன்படியே, அதிமுக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு தொகுதி முன்பு திருச்செங்கோடு தொகுதியாக இருந்தபோது, அதிமுகவின் எம்.பி.யாக இருந்த கே.எஸ்.சவுந்திரம் தான் ஆற்றல் அசோக்குமாரின் தாயார். அசோக்குமாரின் மாமியார் வேறு யாருமில்லை ஈரோடு மாவட்டம் மொடக்குறுச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் தான். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, மொடக்குறிச்சி தொகுதியை அசோக்குமார் குறி வைத்தார். ஆனால், அவரது மாமியாருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. அவர் வெற்றி பெற்றதும், அடுத்ததாக எம்.பி.யாகும் கனவில் அப்போதே ஈரோடு முழுக்க கைக்காசை போட்டு வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார். தொகுதி முழுக்க பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் செய்துள்ளார்.

விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் கேப்டன் மகன்; விருப்ப மனுவை தாக்கல் செய்தார் விஜயபிரபாகரன்

ஈரோடு தொகுதியில் போட்டியிட அதிமுகவில் பெரும்பாலானோருக்கு விருப்பமில்லை என்கிறார்கள். எனவே, அசோக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் பெரிதாக சலசலப்பு எதுவும் அங்கு ஏற்படவில்லை. பெரிதாக மெனக்கெடாமல், கூடுமான அளவுக்கு அவருக்காக வேலை பார்ப்பார்கள் என தெரிகிறது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு இத்தொகுதி ஒதுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அக்கட்சியிலும் போட்டியிட பலரும் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கியது ஈரோடு மக்களவைத் தொகுதி. இந்த தொகுதி, கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்பு வரை திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், 2009ஆம் ஆண்டில் ஈரோடு தொகுதியாக உருவானது.

கடந்த 2019ஆம் ஆண்டில் திமுக கூட்டணியில் மதிமுகவின் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். மதிமுகவின் கணேசமூர்த்தி இரண்டாம் இடம் பிடித்தார். அந்த தேர்தலில் திமுக 3ஆம் இடம் பிடித்தது. அதற்கு முன்பு, 2009ஆம் ஆண்டு தேர்தலில் மதிமுகவின் கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இரண்டாமிடம் பிடித்தார்.

முன்னதாக, திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, மறைந்த பேராசிரியர் அன்பழகன் 1967இல் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 5 முறை திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக, 2004ஆம் ஆண்டில் திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றிருந்தார். திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் 1998இல் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்துள்ளார். அதற்கு அடுத்து 1999, 2004 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் இடம் பிடித்து தோல்வியடைந்துள்ளார்.

இந்த பின்னணியில், ஈரோடு மக்களவை தொகுதியில், அதிமுக - திமுக ஆகிய கட்சிகள் இந்த முறை நேரடியாக போட்டியுகிறது என்பதால், அந்த தொகுதி கவனம் ஈர்த்துள்ளது.

click me!