ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயிரிழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மதன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயிரிழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மாணவர் மரணம் குறித்து தீவிர விசாரணைக்கு வலியுறுத்தி ஜார்க்கண்ட் முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் படித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் மதன்குமார் நவம்பர் 2ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் தடயவியல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்த அவரது உடல் தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ராஞ்சி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர் மதனின் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது மர்மாக உள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவர் மதன்குமாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடிதம் எழுதி, மாணவர் மதன் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார்.