
தமிழக இளம் விளையாட்டு வீரர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடிய ‘Vibe With MKS’ நிகழ்ச்சியில், அவர் பகிர்ந்த சுவாரசியமான கிரிக்கெட் நினைவுகளும், அது தொடர்பான பழைய வீடியோக்களும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
தமிழகத்தில் இருந்து சாதனை படைத்த பல்வேறு விளையாட்டு வீரர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது தனது பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்த அவர், தான் ஒரு 'ஆஃப் ஸ்பின்னர்' (Off-spinner) என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
"எனது பள்ளி நாட்களில் என் தந்தை கலைஞர் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். பள்ளியில் புக் கிரிக்கெட் விளையாடியது முதல் மைதானத்தில் விளையாடியது வரை எனக்கு நிறைய நினைவுகள் உள்ளன," என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான தகவலை முதலமைச்சர் பகிர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற 'நட்சத்திர கிரிக்கெட்' போட்டி நடைபெற்றது. அதில் ஒரு பந்துவீச்சாளராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
"அந்தப் போட்டியில் நான் பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டேன். அப்போது நடிகர் சிம்பு உட்பட மூன்று பேரின் விக்கெட்டுகளை நான் வீழ்த்தினேன்," என அவர் உற்சாகமாகத் தெரிவித்தார்.
முதலமைச்சர் இந்தத் தகவலைப் பகிர்ந்த சில நேரங்களிலேயே, அவர் சொன்ன அந்தப் போட்டியின் பழைய வீடியோக்களை நெட்டிசன்கள் தேடிப்பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வீடியோவில், முதலமைச்சர் வெள்ளை நிற சீருடையில் மிகத் துல்லியமாகப் பந்துவீசி விக்கெட்டுகளைச் சரிப்பதைக் கண்டு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். 'Vibe With MKS' நிகழ்ச்சி மூலம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல், தானும் ஒரு தீவிர விளையாட்டுப் பிரியர் என்பதை முதலமைச்சர் இதன் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
"தலைவர் சரியான ஆல்-ரவுண்டர்", "சிம்பு விக்கெட்டை எடுத்த ஸ்டாலின்" எனப் பல்வேறு கேப்ஷன்களுடன் இந்த வீடியோக்கள் எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.