சண்முகநாதன் மறைவு... இவ்வளவு சீக்கிரம் இழப்போம் என்று நினைக்கவில்லை... மு.க.ஸ்டாலின் வேதனை!!

By Narendran SFirst Published Dec 21, 2021, 8:11 PM IST
Highlights

கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த சண்முகநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த சண்முகநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனி உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவராகவே அவர் இருந்து வந்தார். மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகப் பார்க்கப்பட்ட சண்முகநாதன், கருணாநிதியின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். இவர், வயது முதிர்வு காரணமாக கருணாநிதியின் மறைவுக்கு பிறகு சண்முகநாதன் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து வந்தார். இந்த நிலையில் இன்று உடல் நலக்குறைவு காரணமாக சண்முகநாதன் காலமானார். சண்முகநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று திமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த சண்முகநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் உயிர் மாரடைப்பால் பிரிந்தது. இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அருமை அண்ணன் சண்முகநாதனின் மறைவு எனக்கு தீராத மன துயரத்தை ஏற்படுத்திவிட்டது. அன்புள்ளம் கொண்ட சண்முகநாதனை இவ்வளவு சீக்கிரம் இழப்போம் என்று நான் நினைக்கவில்லை என கூறினார். எந்த கூட்டத்தில் பேசினாலும் பேசி முடிந்ததும் அவரது கருத்தை கேட்பதை வழக்கமாக கொண்டிருப்பேன். தனது மேடை பேச்சை பாராட்டுவார், திருத்துவார், உற்சாகப்படுத்துவார், அனைத்திலும் அவரது அன்பையும், பாசத்தையும் காட்டுவார். உதவியாளர், செயலாளர் என்பதை எல்லாம் எல்லாம் தான் கலைஞரின் நிழலாக இன்னொரு கையாக இருந்தவர்.

கோபாலபுரம் வீட்டின் வலதுபுற அறையில் கணினி முன் அமர்ந்து எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பார் என்று குறிப்பிட்டார். சண்முகநாதன் சுமார் 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். காவல்துறையில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்த சண்முகநாதன், பின்னர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார். அபாரமான நினைவாற்றல் கொண்ட கடின உழைப்பாளியான சண்முகநாதன், கலைஞரின் நிழல் என அழைக்கப்பட்டார். கலைஞர் முதலமைச்சராக இல்லாத போதும் அவரது உதவியாளர் பணியில் தொடர்வதற்காக அரசு வேலையை துறந்தார். 1969ம் ஆண்டு பிப்ரவரியில் கலைஞரின் உதவியாளராக சேர்ந்த சண்முகநாதன், கலைஞர் இறக்கும் வரை அவருடனே இருந்தார். இவருக்கும், கருணாநிதிக்கும்  இடையேயான உறவு அவ்வளவு எளிதில்  யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. கலைஞர் கருணாநிதியை பற்றி தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார் என்று தெரிவித்துள்ளார்.  

click me!