
கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாளில் நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம்கள் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 40 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள எலும்பு வங்கி உள்ளிட்ட புதிய திட்டங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவமனைகளில் உள்ள சேதமடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்த இரு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டில் முதல்கட்ட நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஊழியர்களின் செயலால் நிதி இழப்பீடு ஏற்பட்டிருந்தால் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதலமைச்சர் காப்பிட்டு திட்டத்திற்கான வருமான வரம்பு 72 ஆயிரத்திலிருந்து தற்போது 1 லட்சத்தில் 20 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரவுள்ளது. ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களில் 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
இதில் 98 பேருக்கு தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு அவர்களில் 43 பேருக்கு மரபியல் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டு பெங்களூரு, புனே உள்ளிட்ட மரபியற் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பிய நிலையில் 13மாதிரிகளுக்கு முடிவுகள் பெறப்பட்டதில், அதில் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பும், 8 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பும், தெரியவந்துள்ளது. மீதியுள்ள பரிசோதனை முடிவுகள் படிபடியாக கிடைக்கும். 98பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை எய்ம்ஸ் தொடர்பாக முதல்வர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தியதோடு பல முறை மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்தும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளோம். விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவில் தொடங்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இந்த ஆண்டிற்கான 50 மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 84 சதவிகிதம் பேரும், 2வது தவணை தடுப்பூசி 55.01சதவிகிதமும் செலுத்திகொண்டுள்ளனர். தமிழகத்தில் மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக்குறைவான மக்களே தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளனர்.
மதுரையில் முதல் தவணை தடுப்பூசி 77 சதவிகிதம் பேரும் இரண்டாவது தடுப்பூசி 41.82 சதவிகிதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். இது மாநில அளவோடு ஒப்பிடுகையில் 13 சதவிகிதம் குறைவாக உள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே மதுரை மக்கள் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும். அசைவ மற்றும் மதுப்பிரியர்களின் கோரிக்கை ஏற்று கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நாளான சனிக்கிழமைகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்கள், அந்தந்த ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தினால் அசைவமும், மதுவும் அருந்த முடியாத என்ற தவறான தகவல் பரவியுள்ளது. தமிழகத்தில் உள்ள 11 அரசு மருத்துவகல்லூரிகளின் திறப்பு விழா வரும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் கலந்துகொள்கின்றனர். விருதுநகரில் உள்ள அரசு மருத்துவகல்லூரி குறித்து ஆய்வுசெய்த பின்னர் திறப்பு விழா நடைபெறும் இடம் உறுதிசெய்யப்படும் என்று தெரிவித்தார்.