
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனி உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவராகவே அவர் இருந்து வந்தார். மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகப் பார்க்கப்பட்ட சண்முகநாதன், கருணாநிதியின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கருணாநிதியின் அரசியல் வாழ்வின் ஆவணமாக திகழ்ந்த சண்முகநாதன், குறித்து கருணாநிதியும் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், முன்பெல்லாம் பேராசிரியர், என் போன்றோரின் பேச்சுகளை உடனுக்குடன் பதிவு செய்து எழுதி மேலிடத்துக்கு அனுப்பும் பணியை காவல் துறையின் துப்பறியும் பிரிவினர் செய்வார்கள் அப்படி பதிவு செய்த பேச்சுகளை வைத்து வழக்கு போடுவார்கள். அப்படித்தான் ஒருமுறை என் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு போடும் அளவுக்கு அப்படி என்ன நான் பேசிவிட்டேன் என்பதை அறிய, போலீஸிடமிருந்த எனது பேச்சு நகலை வாங்கிப் பார்த்தேன்.
வியந்தும் போனேன். என்னுடைய பேச்சு, பேராசிரியர் அன்பழகனின் பேச்சு மற்றும் திமுகவினரின் பேச்சுகளெல்லாம் அப்படியே எழுத்து வடிவமாகப் பதிவாகியிருந்தது. ஒரு எழுத்துகூட தவறாமல் அத்தனையும் பதிவாகி இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 'நீங்கள் இப்படிப் பேசினீர்களா?' என்று நீதிமன்றத்தில் கேள்விகள் கேட்ட நேரத்தில், 'மனச் சாட்சிப்படி உண்மைதான், அவை நாங்கள் பேசியது தான்' என்று ஒப்புக்கொள்ளவும் நேரிட்டது. யார் இவ்வளவு தெளிவாக எங்கள் பேச்சை அச்சு அசலாக படியெடுத்திருப்பார்கள் என்று விசாரித்தபோது தான், சண்முக நாதன் பற்றி எனக்கு தெரிய வந்தது. நான் அமைச்சரான போது, பி.ஏ.வாக யாரைப் போடலாம் என யோசித்த நேரத்தில் சண்முகநாதன்தான் நினைவுக்கு வந்தார்.
அந்தத் தம்பியை வைத்துக் கொள்கிறேன் என்றேன். சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர் என்று கூறியிருந்தார். வயது முதிர்வு காரணமாக கருணாநிதியின் மறைவுக்கு பிறகு சண்முகநாதன் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து வந்தார். இந்த நிலையில் இன்று உடல் நலக்குறைவு காரணமாக சண்முகநாதன் காலமானார். சண்முகநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று திமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.