Udhayanidhi: உதயநிதியை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? விமர்சித்த தலைவர்களை கண்டித்த ஸ்டாலின்!

Published : Aug 04, 2026, 07:25 PM IST
Udhayanidhi and MK Stalin

சுருக்கம்

Udhayanidhi: உதயநிதி ஆபாசமாக பேசவில்லை. அவரை சில தலைவர்கள் கண்டித்தது தவறு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அறிக்கை தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முதல்வர் விஜய் குறித்தும், நடிகை குறித்தும் ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்யப்பட்டார். இதற்கு திமுக தலைவரும், உதயநிதியின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் கையாலாகாத்தனத்தை உதயநிதி விமர்சித்தார்

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது.

கழக உடன்பிறப்புகளோடு உழவர் பெருமக்களும் பொதுமக்களும் பங்கெடுத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார்.

இதையும் படிங்க‌: உதயநிதி ஸ்டாலினை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த திமுகவினர் - தமிழக அரசியலில் பரபரப்பு

உதயநிதியை மிரட்டப் பார்க்கிறார்கள்

"நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

காவிரி பிரச்னையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்பும் வகையில் இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலமாக உதயநிதியை மிரட்டப் பார்க்கிறார்கள்.

த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி

நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினெட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள். நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார்.

விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமீனில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்? மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. 'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி.

விஜய்யின் ஒரே வேலை இதுதான்

ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். ட்வீட் போட்டால், வீடியோ பேசினால் கைது செய்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களைப் போராட விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது அராஜகமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

சென்னை மெரினா கடற்கரையே பூட்டி வைக்கப்பட்டது பாசிசத்தின் உச்சம். விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடியதை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போரடியதாகச் சொல்லப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை செய்யச் சென்ற திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய, அதில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது கைது நடவடிக்கையைப் பாய்ச்சியது த.வெ.க. அரசு.

இதையும் படிங்க‌: Udhayanidhi Stalin: உதயநிதி கைதான உடனே 'அந்த' நடிகை போட்ட ட்வீட்.. 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா?

உதயநிதி ஆபாசமாக பேசவில்லை

இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.

ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Udhayanidhi Stalin: உதயநிதி கைதான உடனே 'அந்த' நடிகை போட்ட ட்வீட்.. 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா?
கைதுக்கு பின் வைரலான உதயநிதியின் பேச்சு! ஆபாச நிதி என பெயர் வைத்த தவெக-வினர்! அப்படி என்னதான் பேசினார் உதயநிதி?