ஆயி பூரணம் அம்மாளுக்கு அரசு சார்பில் சிறப்பு விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

By Manikanda PrabuFirst Published Jan 14, 2024, 2:39 PM IST
Highlights

அரசுப்பள்ளிக்கு நிலத்தை நன்கொடையாக அளித்த மதுரையை சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

மதுரை ஒத்தகடை அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாள் (52), மதுரை சர்வேயர் காலனியில் வசித்து வருகிறார். மதுரை தல்லாகுளம் கனரா வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய இவரது கணவர், கடந்த 1991ஆம் ஆண்டு காலமானார்.  இதையடுத்து, அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் ஆயி பூரணம் அம்மாளுக்கு கிளார்க் பணி ஒதுக்கப்பட்டு அங்கு அவர் பணிபுரிந்து வருகிறார்.

தனி ஆளாக நின்று தனது மகள் ஜனனியை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு  முன்பு ஆயி பூரணம் அம்மாளின் மகள் ஜனனி (30) உயிரிழந்து விட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார்.

Latest Videos

இதையடுத்து, கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக ஆயி பூரணம் அம்மாள் கொடுத்தார். அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.7 கோடியாகும்.

 பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவு செய்து ஆவணத்தை கல்வித்துறை அலுவலரிடம் ஒப்படைத்த அவர், தன் மகள் ஜனனியின் நினைவாக அவர் பெயரை மட்டும் பள்ளி வளாகத்துக்கு வைக்கக் கோரியதுடன், இதுகுறித்து எந்த விளம்பரமும் செய்யாமல்,  வழக்கமான தன் வங்கிப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பொங்கல் உரை: எல்.முருகன் வீட்டில் களைகட்டிய நிகழ்ச்சி!

இத்தகவல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கவனத்துக்கு சென்றதும், நேரடியாக வங்கிக்கு சென்று ஆயி பூரணம் அம்மாளை வாழ்த்தி வணங்கினார். இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்திலும் அவர் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ஆயி பூரணம் அம்மாளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மதுரை பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் மாநாட்டில் ஆயி பூரணம் அம்மாள் கவுரவிக்கப்படுவார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசுப்பள்ளிக்கு நிலத்தை நன்கொடையாக அளித்த ஆயி பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.

 

கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம்… pic.twitter.com/NGiHY3iJYG

— M.K.Stalin (@mkstalin)

 

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்.” என பதிவிட்டுள்ளார்.

click me!