
தலைஞாயிறில் இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்தும், குடிநீர் கேட்டும் வெற்றுக் குடங்களுடன் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளுக்கு கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து, உடனே குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி நேற்று தலைஞாயிறு பேரூராட்சியைச் சேர்ந்த மக்கள் வெற்றுக் குடங்களுடன் தலைஞாயிறு கடைத்தெருவில் திடீரென பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமைத் தாங்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன், தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
“தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறோம். பல கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்துச் சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளோம். எனவே தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உடனே குடிநீர் வழங்க வேண்டும்” என்று மக்கள் கோரினர்.
இதையடுத்து “இன்று மாலைக்குள் குடிநீர் விநியோகிக்கப்படும்” என்று அதிகாரிகள் ஒற்றை வரியில் உறுதி அளித்தனர். அந்த உறுதியை ஏற்று மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
இந்த சாலை மறியலால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.