
கடைகளில் மீண்டும் பெப்சி, கோக் குளிர்பானங்கள்…பொது மக்களே விரும்புவதாக வணிகர்கள் வேதனை…
கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்வது இல்லை என்ற முடிவு நடைமுறைக்கு வந்து ஒரு மாதம் ஆவதற்குள் அவை மீண்டும் விற்பனைக்கு வந்துவிட்டது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர் ஏராளமான குளிர்பான விற்பனைக் கடைகள், மார்ச் 1ம் தேதி முதல் கோக், பெப்ஸி குளிர்பானங்களின் விற்பனையை நிறுத்திவிட்டன. ஒரு சில கடைகள், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த குளிர்பானங்களை மட்டும் விற்பனை செய்து வந்தன.
ஆனால், தியேட்டர்கள், மால்கள் பிரியாணி மற்றும் பீட்சா கடைகளில் காம்போவாக, தடை செய்யப்பட்ட பெப்சி, கோக் குளிர்பானங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டே வந்தன.
கடந்த ஒரு மாதமாக விற்பனையை நிறுத்தி வைத்திருந்த சில வணிகர்கள் மீண்டும் கோக், பெப்ஸி குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இது குறித்து கடை உரிமையாளர்களிடம் விசாரித்தபோது, பெரும்பாலான பொது மக்கள் பெப்சி, கோக் இருக்கிறதா என்றுதான் கேட்கிறார்கள் என தெரிவித்தார்
மக்கள் தொடர்ந்து கேட்கும்போது எத்தனை நாட்களுக்குத்தான் இல்லை என்று சொல்வது என வணிகர்கள் கேட்கிறார்கள்.
சென்னை மட்டுமல்ல மதுரை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கூட, குளிர்பான விற்பனை நிலையங்களின் அலமாரிகளில் பெப்ஸியும் கோக்கும் அவற்றுக்கான இடங்களை மீண்டும் பிடித்துவிட்டன.
அரசே முன்வந்து பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை தடை செய்தால்தான் அதன் விற்பளையை நிறுத்தமுடியும் என வணிகர்கள் தெரிவித்தனர்.