
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு மத்திய சுகாதாரத்துறை செயலளார் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் இன்று 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகியிருக்கிறது. இதனால் மத்திய அரசு கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அந்தந்த மாநிலங்களுக்கு தனித்தனியாக அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் பல்வேறு அறிவுறித்தல்களை வழங்கியுள்ளார். அதில், வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி மத்திய அரசு இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறது.
மேலும் கொரோனா பரவலை கண்காணிக்காவிட்டால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறியிருக்கிறது. தொடர்ந்து மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், ஆர்டி- பிசிஆர் சோதனைகளை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரிக்கவும், கொரோனா சிகிச்சை மையங்கள், மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா போன்ற அனைத்து மாநிலங்களுக்கும் தனித்தனி அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252 பேருக்கும், குஜராத்தில் 92 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்ப்உ உறுதியாகி உள்ளது. மொத்தமாக 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 320 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஏறுமுகமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று திடீரென 13 ஆயிரத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மும்பையில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதும். இது முந்தைய நாளை விட 82% அதிகமாகும். இதில் 53 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இதனிடையே மும்பையில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் இன்று முதல் 7 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதுபோல் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 46 % பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவரப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.