
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், சென்னையில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் பிரமாண்ட விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால், பல விபத்துகளும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியும், சட்ட விரோதமாகவும், சாலையில் பிரமாண்டமான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருப்பது குறித்து படங்களுடன் செய்தி வெளியாகின.
இதைதொடர்ந்து, விளம்பர பலகைகளை முழுமையாக அகற்றும் நடவடிக்கையில், சென்னை மாநகராட்சி அதிரடியாக களம் இறங்கி உள்ளது. அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும், விளம்பர பலகைகளை அகற்றும்படி கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- முதன்மை செயலாளர் ஆணைக்கு ஏற்ப சென்னையின் மண்டலம் 1 முதல் 15 வரை மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள், தட்டிகள், சுவரொட்டிகளை உடனடியாக கட்டுமானத்துடன் அகற்ற வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களிடம் விதிமுறைகளின்படி தண்ட தொகையோ அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தோ நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை அறிக்கையாக, மாநகர வருவாய் அலுவலர் அவர்களுக்கு தனிநபர் மூலம் இன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.