
தமிழகத்தில் தற்போது இயக்கப்பட்டுவரும் பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக 2000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் அனைத்தும் பெரும்பாலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது. தற்போது அந்த பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழையதாகி இயக்கவே முடியாத சூழ்நிலையில் உள்ளன.
இதனிடையே அரசுப் பேருந்துகள் நஷ்டத்தில் இயக்கப்படுவதால் கிட்டத் தட்ட 3000 பேருந்துகளை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக நேற்று முதல் படிப்படியாக பேருந்துகள் இயக்குவதை நிறுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் இன்று நடைபெற்ற சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழகத்தில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 2000 பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அனைத்துப் பணிக்கொடைத் தொகை அனைத்தும் நிலுவை இல்லாமல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இனிமேல் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாமாதம் ஓய்தியத் தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.