
இசை வளர்த்த மண்:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் புதிய இசைப்பள்ளி தொடங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "விராலிமலை என்பது இசை வளர்த்த மண். பெரும் இசைவாணர்கள் வாழந்த, வாழுகின்ற பூமி அது. குறிப்பாக பரதநாட்டியக் கலையில், 32 வகையான அடவுகளுக்கும் தனித்தனியே நாட்டிய அபிநயங்களோடு ஆடக்கூடிய மிக சிறப்பான பரதநாட்டியக் கலைஞர்கள் அங்கு வாழ்ந்தார்கள். இசை பரம்பரையினர் வாழ்ந்த பெருமைக்குரிய மண்.
அந்த மண்ணிற்கென்று ஒரு தனியான இசை பாரம்பரியம் இருப்பதை சட்டப்பேரவை உறுப்பினர் சுட்டிக்காட்டியதை நான் வரவேற்கிறேன். ஆனாலும் கூட அங்கிருந்து 28 கி.மீ தொலைவில் திருச்சி இருக்கிறது. 40 கி.மீ தொலைவிலே புதுக்கோட்டையில் இசைப்பள்ளிகள் இருக்கின்றன. எனவே எதிர்காலத்தில் அங்கு ஒரு இசை மரபினை போற்றி வளர்க்கக்கூடிய ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்படும்போது இந்த கோரிக்கையை அரசு நிச்சயமாக பரிசீலிக்கும்" என்று பதிலளித்தார்.
இசைப்பள்ளி:
இதற்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "பரதம், நாட்டியம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட கலை வளர்த்த தமிழகத்தில், வரும் காலத்திலே தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்த கலைஞர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையிலே கலை பண்பாட்டுத் துறையின் மூலம் உலகளவில் புதிய திட்டங்களை அரசு ஏற்படுத்துமா' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ”நலிவுற்ற கலைஞர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கக்கூடிய வகையில், அவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதாக இருந்தாலும், இந்த கலை வடிவங்களை உலகளவில் பரப்பக்கூடிய விசயங்களாக இருந்தாலும் முதல்வர் இதுபோன்ற விசயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.
அவருடைய வழிகாட்டுதலில் இயங்கக்கூடிய இந்த கலை பண்பாட்டுத்துறை வரும் காலங்களிலும் தமிழ் மண்ணுக்கென்று சொந்தமாக இருக்கக்கூடிய இத்தகைய கலை வடிவங்களை, நுண் கலைகளை , செவ்வியல் இசை கலை வடிவங்களை உலகளவில் எடுத்துச்செல்லும் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிலளித்தார்.
மேலும் படிக்க: பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்...! சட்டப்பேரவையில் ஸ்டாலின் அதிரடி..
தமிழ் இசை ஆதி இசை:
அப்போது ஓவ்வொரு மாவட்டத்திற்கு இசை பள்ளி தொடங்கப்பட வேண்டும். இதன் மூலம் தமிழ் இசை உலகம் முழுவதும் சென்றடையும் என பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இசை பள்ளி, 4 கல்லூரிகள் மற்றும் ஒரு இசை பல்கலைக்கழகம் தற்போது உள்ளன. மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், தேவை பொருத்து வரும் காலங்களில் இசை பள்ளி தொடங்கப்படும். ஆதி இசை, தமிழ் இசையாக தான் இருந்திட வேண்டும். தமிழ் இசைக்கான உரிய முக்கியத்துத்தை அரசு வழங்கும், என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், "தஞ்சையில் பரதநாட்டியப் பள்ளி, இசைப் பள்ளியை கொண்டு வருமா" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "தஞ்சையே கலைகளுக்கான மிக முக்கியத்துவமான இடம் என்பதிலே மாற்றுகருத்துக்கு இடமில்லை. கலைகளை வளர்த்த தஞ்சை மாநகரில், தொடர்ந்து அந்த கலைகளை ஊக்குவிக்கும் வகையில், நிச்சயமாக வரக்கூடி காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்" என்று கூறினார்.
மேலும் படிக்க: முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி.. உடனே போன் போட்டு விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.!