Minister Sekar Babu : தஞ்சை பெரிய கோயிலுக்கு நடிகர் சிவாஜி கனேசன் பரிசாக வழங்கப்பட்ட யானை உயிரிழந்ததால், கோயிலுக்கு புதிய யானை வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு பதில அளித்துள்ளார்.
சிவாஜி யானை பரிசளித்த யானை உயிரிழப்பு
தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரைசந்திரசேகர், நீதிகட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்து சமய அறநிலையங்கள் துறை, திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருவாரூர் தேரை ஓட்டி காட்டியவர் கலைஞர், சென்னை ஆதிகேசவ பெருமாள் கோயில் தேர் 87 ஆண்டுகளுக்கு பின் ஓட்டப்பட்டுள்ளது. ஆனால், நீதிக்கட்சியின் ஆட்சியில் மதவாத சக்திகள் செய்த அதே பிரச்சினைகளை தற்போதும் செய்து வருகின்றனர் என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், தஞ்சையில் உள்ள ராஜ ராஜனால் கட்டப்பட்ட பெரிய கோயிலுக்கு நடிகர் சிவாஜி கனேசன் குட்டியானையை பரிசாக வழங்கியிருந்தார். இந்த யானை உயிரிழந்துவிட்டது.
இதனால் யாராவது பரிசாகவோ, அரசோ கோயிலுக்கு யானை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தஞ்சையில், 100க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான 4 கோயில்களின் திருப்பணிகள் நடத்திட வேண்டும், ராஜ ராஜ சோழன் எந்த போருக்கு செல்வதற்கு முன் தனது வாளை வைத்து பூஜை செய்தும், போர் முடிந்த பிட் வந்து வழிபடும் குழதெய்வ கோயிலில் ராஜ கோபுரம் கட்டித்தர வேண்டும் என பல்வேறு கோயில் திருப்பணிகள் குறித்து திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கோரிக்கை வைத்தார்.
நேரடியாக கோயிலுக்கு யானை வழங்க முடியாது
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு, இதுவரை உயிரிழந்த 11 யானைகளுக்கு 60 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. 27 யானைகளுக்கு நீராட குளியல்தொட்டி கட்டித்தரப்பட்டுள்ளது என கூறியதோடு, தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, வனத்துறை சட்டத்தின் படி நேரடியாக யானை திருக்கோயிலுக்கு வழங்க அனுமதி இல்லை, அதனால் யாராவது யானை வளர்த்து வந்தால், அந்த யானையை தானமாக கோயில் வழங்கினால் மட்டுமே கோயிலுக்கு யானை அரசு அனுமதியுடன் வழங்கப்படும்.
அதனால் யாரேனும் முன் வந்தால் யானை வழங்கப்படும் என கூறியதோடு, துரைசந்திரசேகர் அவரது தொகுதிக்கு மட்டும் 25 கோயில்களுக்கு 30 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையங்கள் துறை ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை 1804 கோயில்களுக்கு குடமுழக்கு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளாக இருந்த 6,004 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.