
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அதாவது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் இதுவரை 3,503 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் சாதனையாகும். வரும் தை மாதத்திற்குள் 4,000 திருக்கோயில்களை நிறைவு செய்யும். திருக்கோயில்கள் சார்பில் கடந்தாண்டு வரை 1,800 கட்டணமில்லா திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு அறிவிக்கப்பட்ட 1,000 திருமணங்களில் 737 திருமணங்கள் நடத்தப்பட்டு மொத்தம் 2,537 இணைகளுக்கு 4 கிராம் பொன் தாலி உள்பட சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் மிகப்பெரிய சாதனை ஆக்கிரமிக்கப்பட்ட திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டதாகும். இதுவரை 1,026 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ. 7,846.62 கோடி மதிப்பிலான 7,923.86 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை உயர்வு
ஒருகால பூசைத் திட்டத்தில் பயன்பெற்று வந்த 12,959 திருக்கோயில்களுக்கான வைப்பு நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், பின்னர், ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் தற்போது 19,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக அரசு ரூ.335 கோடியை மானியமாக வழங்கியுள்ளது. ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல் ஊக்கத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. இத்திட்ட அர்ச்சகர்களின் மகன், மகள்களின் உயர்கல்வி பயில ஊக்கத்தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டு இதுவரை 1,500 மாணவ, மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.
திருக்கோயிலுக்கு யுனெஸ்கோ விருது
திருக்கோயில்களில் திருப்பணிகள் ஆன்மிகப் புரட்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்றபின், 12,152 திருக்கோயில்களில் ரூ.6,980 கோடி மதிப்பீட்டிலான 27,563 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதில் ரூ.3,843 கோடி மதிப்பீட்டிலான 14,594 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. உபயதாரர்கள் மட்டும் ரூ.1,470.21 கோடி மதிப்பிலான 11,556 திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களாக 714 திருக்கோயில்கள் கண்டறியப்பட்டு அரசு நிதி, திருக்கோயில் நிதி, பொதுநல நிதி மற்றும் உபயதாரர் நிதி ரூ.571.55 கோடி மதிப்பீட்டில் 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 68 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன. இத்திருப்பணிக்காக மட்டும் அரசு ரூ.425 கோடியினை வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், துக்காச்சி, அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
109 புதிய இராஜகோபுரங்கள்
கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், பின்னர் ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ.212.50 கோடியில் 5,000 கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் 5,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் திருக்கோயில்கள் பயன்பெற்றுள்ளன. திருக்கோயில்களில் முகப்பாக இராஜகோபுரங்கள் திகழ்கின்றன. இந்த அரசு பொறுப்பேற்றபின், ரூ.216.74 கோடி மதிப்பீட்டில் 107 திருக்கோயில்களில் 109 புதிய இராஜகோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.93.84 கோடி மதிப்பீட்டில் 329 திருக்கோயில்களில் 351 இராஜகோபுரங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
40 மரத்தேர் மராமத்து பணிகள் நிறைவு
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை ஓட்டி காட்டியதைபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாதி, மத வேறுபாட்டால் 18 ஆண்டுகள் ஓடாமல் இருந்த சிவகங்கை மாவட்டம், கண்டதேவி தேரோட்டத்தை நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஓட்டி காட்டினார். கடந்த நான்காண்டுகளில் ரூ.75.55 கோடி மதிப்பீட்டில் 130 திருக்கோயில்களுக்கு 134 புதிய மரத்தேர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் 28 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ரூ.19.20 கோடி மதிப்பீட்டில் 72 திருக்கோயில்களில் 75 மரத்தேர்கள் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் 40 மரத்தேர் மராமத்து பணிகள் நிறைவு பெற்றுள்ளன. திருத்தேர்களை பாதுகாக்கும் வகையில் ரூ.30.31 கோடி மதிப்பீட்டில் 197 திருத்தேர் கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதில் 104 பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
128 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள்
ரூ.31 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்களும், ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்களும் செய்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பெரியபாளையம் தங்கத்தேரும், திருத்தணி மற்றும் சென்னை காளிகாம்பாள் திருக்கோயில்களின் வெள்ளித்தேர்களும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தந்தை பெரியார் கண்ட கனவினை நிறைவேற்றும் வகையில் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ் 29 அர்ச்சகர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருக்கோயில்களில் 12 பெண் ஓதுவார்கள் உட்பட 46 ஓதுவார்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 714 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கருணை அடிப்படையில் துறையில் 34 நபர்களுக்கும், திருக்கோயில்களில் 128 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
குடும்பநல நிதி ரூ.4 இலட்சமாக உயர்வு
இந்த அரசு பொறுப்பேற்றபின், நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 935 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,347 பணியாளர்கள் பணிவரன் முறைப்படுத்தப்பட்டுள்ளனர். அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதோடு, ஓய்வு பெற்ற அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பொங்கல் கருணைக்கொடை முதன்முதலாக வழங்கிய ஆட்சி முதலமைச்சர் அவர்களின் ஆட்சியாகும். திருக்கோயில் பணியாளர்களுக்கு குடும்பநல நிதி ரூ.4 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருக்கோயில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்மிகப் பயணத்தை பொறுத்தளவில் இந்த அரசு தனிமுத்திரை பதித்துள்ளது.
கட்டணமில்லா சுற்றுலா
ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், இராமேசுவரம்-காசிக்கும் மூத்தக் குடிமக்கள் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கு அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆன்மிகப் பயணங்களின் மூலம் 7,797 பக்தர்கள் பயன்பெற்றுள்ளனர்.
ஏகாம்பரநாதர் குடமுழுக்கு
திருவொற்றியூர் திருவள்ளூர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் மற்றும் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் அமைந்துள்ள 1000 கால் மண்டபத்தினை சீரமைத்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அரசு திராவிட மாடல் அரசாகும். காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.