மத்திய அரசின் அடாவடியே புதிய டிஜிபி நியமனத்திற்கு தாமதம்.! உண்மை காரணங்களை போட்டுடைத்த அமைச்சர் ரகுபதி

Published : Oct 23, 2025, 07:22 AM IST
Minister Raghupathi

சுருக்கம்

Tamil Nadu DGP appointment delay : தமிழக டிஜிபி நியமன தாமதம் குறித்து எடப்பாடி பழனிசாமி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். மாநில உரிமைகளை மீறி ஒன்றிய அரசு தலையிடுவதே தாமதத்திற்குக் காரணம் என கூறியுள்ளார்.

Tamil Nadu DGP appointment delay : தமிழகத்தில் டிஜிபி நியமனம் காலதாமதம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய டி.ஜி.பி. நியமனம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் முன்னாள் டி.ஜி.பி. அவர்களின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தும், இதுவரை புதிதாக டி.ஜி.பி. நியமிக்கப்படவில்லை என்றும். தங்களுக்கு ஏற்ற நபரைத் தேர்தல் நோக்கத்திற்காக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு காலதாமதம் செய்யப்படுகின்றது என்றும் வழக்கம்போல் அடிப்படையில்லாமல் பேசியிருக்கிறார்.

டிஜிபி நியமனம் தாமதம் ஏன்.?

டி.ஜி.பி. மாண்பமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தால்தான். புதிய நியமனத்திற்கான பட்டியல் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) உரிய காலத்தில், அனுப்பி வைக்க இயலவில்லை என்ற அடிப்படை உண்மையைக் கூட அவர் தெரிந்து கொள்ள முற்படவில்லை. வழக்கு முடிந்தபின்னர் எந்தவிதக் காலதாமதமும் இன்றி அந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்ததையும் அவர் புரிந்து கொள்ளவில்லை.

அதன்பிறகு டிஜிபி நியமனப் பட்டியல் தொடர்பாக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கூட்டத்தில், விதிகளுக்குப் புறம்பாக சில பெயர்கள் முன்மொழியப்பட்டது குறித்து, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு பழனிசாமி போல அமைதி காக்க முடியாது.

இருப்பினும், மாநில சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான தமிழ்நாடு அரசின் கருத்துகளை ஏற்காமல், தாங்கள் விரும்பியவர்களையே முன்மொழிந்து ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பட்டியலை அனுப்பி வைத்தது. இந்தப் பட்டியல் தமிழ்நாடு அரசால் ஏற்கத்தக்கதாக இல்லாத நிலையில், அதற்கான காரணங்களை முழுமையாக விளக்கி, தலைமைச் செயலாளர் அவர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதற்கான பதில் இன்னும் பெறப்படாத நிலையில், "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்" என்ற கதையாக மாநிலச் சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு மாநில உரிமையாக விட்டுக் கொடுத்து, பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த பழனிச்சாமி அவர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

மத்திய அரசின் அடாவடி

தமிழ்நாடு அரசு தனக்கு வேண்டப்பட்ட நபரை புதிய டி.ஜி.பியாக அமர்த்த வேண்டும் என்பதல்ல இங்கே உள்ள பிரச்சினை. சட்டம் - ஒழுங்கு தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களைப் புறக்கணித்து தனக்கு வேண்டப்பட்ட நபர்களைத் தமிழ்நாட்டில் டி.ஜி.பி.ஆக அமர்த்துவதற்கு ஒன்றிய அரசு முயலும் அடாவடிதான் புதிய டிஜிபி நியமனத்தில் தமிழ்நாடு அரசு சந்திக்கும் பிரச்சினை. ஏற்கனவே இதுபோன்ற பல பிரச்சினைகளில், மாநில அரசின் உரிமைகளை திராவிட மாடல் அரசு நிலைநாட்டியதைப் போன்று டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமைகளை நிலைநாட்ட முழுமுயற்சிகளையும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் ஏதேதோ சொல்லிப் புலம்புகிறார்.

அதிமுக ஆட்சியில் டிஜிபி நியமனம்

தற்போது புதிய டி.ஜி.பி. நியமனத்தைக் குறை கூறும் திரு. பழனிசாமி அவர்கள், தாம் வணங்குவதாகக் கூறும் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் எந்த சட்டப் பிரச்சினையும் இல்லாத போதே, எத்தனை மாதங்கள். எத்தனை ஆண்டுகள் டி.ஜி.பி. இல்லாமல் அரசை நடத்தினார் என்பதை விரல் விட்டு எண்ணிப் பார்க்க வேண்டுமே தவிர மாநில உரிமைகளுக்காகப் போராடும் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் குறை கூறுவதா? என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்