
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாத லோக்கல் அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு பேய் விரட்டும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.
தமிழகத்தில் நடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப் போனதால் விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.. அதே நேரத்தில் விவசாயிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் அருகே கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆனால் இதே கோவில்பட்டி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக இருக்கும் கடம்பூர் ராஜூ, இந்த போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் பல்வேறுவிழாக்களில் பங்கெடுத்து வருகிறார். ஆனால் அவர் விவசாயிகளை சந்திக்க வராததால், கடுப்பான விவசாயிகள் அவரைப்போல ஒருவரை உட்கார வைத்து அவரது படத்துடன் முகமூடி அணிவித்து அவருக்கு வேப்பிலைகளை கொண்டு பேய் விரட்டும் போராட்டத்தை நடத்தினர்.
நூதனமான இந்தப் போராட்டம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.