
ஹெல்மெட் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை இருசக்கர வாகனத்தில் வரும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் தினமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து பாதிக்கப்பட்டோர் காவல்நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். பெண்களிடம் நகைகளை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் கொள்ளையர்கள் பறந்து செல்கின்றனர்.
இதில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்திருப்பதால் கொள்ளையர்களின் முகங்களை கண்டறிய போலீசார் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க சென்னை நகர காவல்துறையினருக்கு ஆணையர் விஸ்வநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையினர் காலை மாலை வேலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கொள்ளையர்களால் பாதிப்படைவோர் உடனே காவல்துறைக்கு செல்போன்கள் மூலம் தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கொள்ளையர்களை பிடிக்க காவல் நிலையத்தில் உள்ள பழைய குற்றவாளிகளின் பட்டியல்களை எடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்யவும் நகைகள் கொள்ளை போன பகுதியில் உள்ள அடகு கடைகளில் தினமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.