
சென்னை வடபழனி தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தது கவலை அளிப்பதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பை நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணையின் இறுதியில் தான் தெரிய வரும் என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தது கவலை அளிக்கிறது என்றார்.
இது போன்ற எதிர்பாரத நிகழ்வுகளுக்கு அரசு உதவி செய்யும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிமுறைகளை பின்பற்றாததால் இவ்விபத்து நேர்ந்ததா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த, விதிமீறல்கள் இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் உறுதிபடக் கூறினார்.