நாளிதழ் விளம்பரத்தில் சீன கொடி சர்ச்சை தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்
பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு நேற்று மாலை புறப்பட்டு சென்றார். முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில், சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குறிப்பாக, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை வாழ்த்தி மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாளிதழ்களில் விளம்பரம் அளித்திருந்தார். அதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பின்னணியில் சில ராக்கெட்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் பிரதானமாக இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனாவின் கொடி இடம்பெற்றிருந்தது. அருகில் இருந்த மற்றொரு ராக்கெட்டில் சீன எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.
undefined
இந்த விவகாரம் கடும் சர்ச்சையானது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியும் இதுகுறித்து பேசினார். “திமுகவின் இன்றைய விளம்பரம் நகைப்புக்குரியதாக உள்ளது. அவர்கள் இந்திய அறிவியலையும், இந்திய விண்வெளித் துறையையும் அவமதித்துள்ளனர். அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில், நாளிதழ் விளம்பரத்தில் சீன கொடி சர்ச்சை தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை மற்றும் தூத்துக்குடி மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையம் ஆகியவை இணைந்து மீன்பிடிப் படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மீனவர்களுக்கான ஒருவார கால இலவச பயிற்சி துவக்க விழா இன்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடந்தது. இவ்விழாவில் தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சியை துவக்கி வைத்தார்.
மாநிலங்களவை தேர்தல் சலசலப்பு: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை!
அதன்பின்னர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக விளம்பரத்தில் சீன தேசிய கொடி இடம்பெற்ற சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது தொடர்பாக எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில் சீன அடையாள கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது. தெரியாமல் நடந்த தவறு. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று இருக்கிறது. நான் இந்தியன்தான். இந்தியா மீது பற்றுள்ளவன்தான்.” என்றார்.
மேலும், “ஒரு அரசு விழாவில் திட்டத்தையும் பயனையும் பற்றி பேசவார்களே தவிர அரசியல் பேச மாட்டார்கள். அப்படி அரசியல் பேசியது நமது நாட்டின் பிரதமர் என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது.” என பிரதமர் மோடியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாடினார்.