
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கைதிகளை ஏற்றிச் சென்ற காவல் பேருந்தின் மீது மினி ஆட்டோ மோதியதில் இரண்டு ஓட்டுநர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மாற்று வண்டியில் கைதிகள் பத்திரமாக சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு கைதிகளை காவல் துறைக்கு சொந்தமான ஒரு பேருந்தில் நேற்று அழைத்துச் சென்றனர்.
இதில் 15 கைதிகள், 10 துப்பாக்கி ஏந்திய காவலாளர்கள் என மொத்தம் 25 பேர் பயணம் செய்தனராம். இந்தப் காவல் பேருந்து, கிருஷ்ணகிரியை கடந்து தேசிய நெடுஞ்சாலையில் நாட்டாண்மைக் கொட்டாய் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, எதிரே வந்த மினி ஆட்டோ இந்தப் பேருந்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி இரு வாகனங்களும் சாலையோர வயல் வெளியில் இறங்கின. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காவலாளர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கைதிகளை பாதுகாப்பாக மாற்று வாகனத்தில் சேலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி அணை காவலாளர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.