
நெல்லை மாநகரப் பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் பால் பாக்கெட்டுகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த தொடர் திருட்டுச் சம்பவங்கள் டீக்கடை உரிமையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நூதனத் திருட்டு நடப்பது எப்படி?
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள டீக்கடைகள் மற்றும் பழக்கடைகளுக்கு, அதிகாலையில் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே விநியோகஸ்தர்கள் பால் பாக்கெட்டுகளை மொத்தமாக கடை வாசலில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, டீக்கடைகளைக் குறிவைத்து அதிகாலையில் வைத்துச் செல்லப்படும் பால் பாக்கெட்டுகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஜங்ஷனில் திருட்டு முயற்சி முறியடிப்பு:
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அதிகாலையில் பால் பாக்கெட்டுகள் வைத்துச் செல்லப்பட்டவுடன், அதை நோட்டமிட்ட ஒரு மர்ம நபர் அவற்றை தனது மொபட்டில் திருடிச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் வந்த ஒருவர் சத்தம் போடவே, அந்த மர்ம நபர் தான் திருடிய பால் பாக்கெட்டுகளை அங்கேயே போட்டுவிட்டு, தான் கொண்டு வந்த மொபட்டையும் போட்டுவிட்டு தப்பியோடினார்.
வண்ணார்பேட்டையில் திருட்டு:
அதே மர்ம நபர், வண்ணார்பேட்டையில் இருந்து முருகன்குறிச்சி நோக்கிச் செல்லும் திருவனந்தபுரம் சாலையில் மற்றொரு மொபட்டில் வந்துள்ளார். அங்குள்ள ஒரு டீக்கடையின் முன்பு மொபட்டை நிறுத்திய அந்த நபர், அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லிட்டர் பால் பாக்கெட்டுகளைத் திருடிச் சென்றுள்ளார்.
இந்தத் திருட்டு தொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்தச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு வாகனமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காவல்துறைக்கு கோரிக்கை:
இந்தத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபரை போலீசார் உடனடியாகப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டீக்கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தொடர் திருட்டுகளால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.