எம்.ஜி.ஆர். வழியில் வந்த அதிமுக அரசு தூத்துக்குடி மக்களை சந்திக்க வேண்டும் - யாரை சொல்கிறார் மயில்சாமி...

First Published Jun 12, 2018, 11:07 AM IST
Highlights
MGR AIADMK government should meet Thoothukudi people - mayilsaamy


தூத்துக்குடி
 
எம்.ஜி.ஆர். வழியில் வந்த அ.தி.மு.க. அரசு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய மயில்சாமி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். சிலர் இன்னமும் மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து, துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முனியசாமி, மாவட்ட தலைவர் பெரியாரடியான், மண்டல செயலாளர் பால்.ராசேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம், "தமிழ்நாட்டில் இதுபோன்று துயர சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. இது மிகவும் கொடுமையானது. 

துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் பலர் காயம் அடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபர்கள் பேசக்கூட பயப்படுகின்றனர்.

பணம் கொடுத்ததால் பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று அரசு நினைக்கக் கூடாது. போன உயிரை மீட்க முடியாது. எந்த நோக்கத்துக்காக போராட்டத்தை நடத்தினார்களோ அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. 

அதில் விஷமிகள், சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள் என்று கூறி களங்கப்படுத்தக் கூடாது. போராடியவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள்.

தமிழக அரசுக்கு அன்பான வேண்டுகோள். ஜனநாயக முறையில் மக்களை காப்பாற்றுங்கள். பெரு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளுக்காக மக்கள் வாழ்வோடு விளையாடாதீர்கள். 

அமைதி திரும்பும் காலத்தில் வந்தால்தான் உண்மை தெரியவரும் என்பதற்காக இப்போது வந்துள்ளேன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட காயம் அடைந்து உள்ளனர். 

இது கொடுமையானது. தமிழக அரசு இதில் அரசியல் பார்க்கக்கூடாது. மக்களை, மக்கள் உரிமைகளை மதிக்காத எந்த அரசும் தொடர்ந்ததாக வரலாறு இல்லை. நகரில் அமைதி திரும்பியதாக கூறினாலும் மக்கள் மனதில் அமைதி திரும்ப வேண்டும். 

நாளை இந்த பிரச்சனைகளுக்கு கடுமையான விலை கொடுக்க வேண்டிய நிலை வரும். அதனை மறந்து விடாதீர்கள்" என்று கூறினார்.

இதேபோல, நடிகர் மயில்சாமியும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "காவலாளர்கள் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதால் மக்கள் பயத்திலேயே இருக்கிறார்கள்.  மக்கள் மனதில் அமைதி திரும்ப வேண்டும். 

எம்.ஜி.ஆர். வழியில் வந்த அ.தி.மு.க. அரசு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

click me!