
சேலம் பசுமை வழிச்சாலைக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் நத்தம்-மதுரை இடையே அமையப்போகும் நான்கு வழிச்சாலைக்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நத்தம்-மதுரை சாலை போக்குவரத்து குறைவான சாலை. சாலையின் இரண்டு பக்களிலும் மரங்கள் சூழ்ந்து குன்றுகளும் மலைகளும் என அழகாக காட்சியளிக்கும் சாலை. நத்தம் பகுதியில் ரெடிமேட் ஆடைகளுக்கான உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. இந்த சாலை அமைந்தால் எளிதில் ஆடைகளை ஏற்றுமதி செய்யலாம், விரைவாக மதுரை செல்லலாம் என்கிறார்கள் அரசு அதிகாரிகள். ஆனால் இதை முழுவதுமாக மறுக்கின்றனர் சமூக, இயற்கை ஆர்வலர்கள்.
நத்தம் உலுப்பகுடியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து தங்கு தடையில்லாமல் வீரர்கள் வருவதற்கே இந்த சாலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். இந்த கிரிக்கெட் மைதானம் முன்னால் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு சொந்தமானது என்கின்றனர். அவரின் செல்வாக்கால்தான் இந்த திட்டம் நத்தம்-மதுரை சாலையில் செயல்படுத்தபடுத்துவதற்கான வேலைகள் நடக்கிறதாக தெரிவிக்கின்றனர் அறப்போர் இயக்கம் போன்ற சமூக ஆர்வலர்கள்.
இன்று மற்றும் நாளை (ஜூன் 7, 8) இரண்டு நாட்களும் நில ஆர்ஜிதம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில உரிமையாளர்களிடம் விசாரணை நடக்க உள்ளதாம். ஏற்கனவே ஊமச்சிக்குளம் பகுதிகளில் தங்களின் பூர்வீக நிலங்களை விட்டு வெளியேற சொல்லியிருப்பதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். இந்தத் திட்டம் செயல்படுத்தபட்டால் சாலையின் இருபுறமும் உள்ள சுமார் நூறு ஆண்டுகள் பழமையான 900 மரங்கள் அழிக்கப்படும். மேலும் சுங்கவரி கட்டணமும் வசூலிக்கப்படும் என அப்பகுதி மக்கள் குமுற ஆரம்பித்துள்ளனர்.
மேலும், திண்டுக்கல் நகரத்தில் இருந்து மதுரைக்கு சுங்கவரி சாலை (தேசிய நெடுஞ்சாலை) வழியாகவே செல்ல முடியும். அதே நேரத்தில் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் வழியாக மதுரைக்கு செல்வதால் (மாநில சாலை என்பதால்) சுங்கவரி கட்டணத்தை தவிர்க்கலாம். இரண்டு வழிகளிலுமே ஒரே தூரம்தான். இதை தடுக்கவுமே நான்கு வழிச்சாலை திட்டம் என்கின்றனர்.
பழமையான மரங்களை அழிக்காமல், விவசாயத்திற்கும் மக்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் சாலை அமைக்கப்பட்டால் அனைவருக்குமே சந்தோஷம்தான்!