
திருநெல்வேலி
"குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், அந்த நிறுவனங்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா எச்சரித்தார்.
குழந்தைத் தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது.
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவ - மாணவிகள் தங்களது கால்களில் ஸ்கேட்டிங் சக்கரங்களை பொருத்திக் கொண்டு அணிவகுத்து புறப்பட்டனர்.
இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் ஷில்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது வ.உ.சி. மைதானம், முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை வழியாக ஆட்சியர் அலுவலகத்தில் சென்று நிறைவடைந்தது.
அதன்பின்னர், ஆட்சியர் ஷில்பா பேசியது: "தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ், மத்திய - மாநில அரசுகள் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 5473 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 5408 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்பட்டு, நல்வழிபடுத்தப்பட்டு உள்ளனர்.
தொழிலாளர்களாக கண்டறியப்படும் குழந்தைகள், இந்த திட்டத்தின் மூலம் நடத்தப்படும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கல்வியில் ஆர்வமூட்டப்பட்டு, முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
பயிற்சி மையங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள், சீருடைகள், மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும், ஊக்க தொகையாக குழந்தைகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.400 செலுத்தப்படுகிறது.
சிறப்பு பயிற்சி மையங்களில் படித்த தற்போது கல்லூரியில் மேற்படிப்பு படிக்கும் 26 மாணவ - மாணவிகளுக்கு ஒரு கல்வி ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், அந்த நிறுவனங்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆட்சியர் ஷில்பா எச்சரித்தார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகளுக்கு ஆட்சியர் ஷில்பா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சந்திரகுமார், திட்ட மேலாளர் விசுவநாதன்,
கள பணியாளர்கள் ரவீந்திரன், சேதுராமன், ராஜேஸ்வரி, தொழிலாளர் நல துறை அதிகாரிகள், சைல்டு லைன் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.