கால்நடைகளுக்கு தண்ணீர் கேட்டு போராட்டம்; மாட்டுக்கு சாப்பிட துண்டு பிரசுரங்களை கொடுத்ததால் பரபரப்பு...

First Published Jun 12, 2018, 9:23 AM IST
Highlights
Fight for livestock Feeding the cow by giving leaflets


திருச்சி 

முக்கொம்பு மேலணையில் தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கால்நடைகளுக்காக வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று திருச்சியில் மாட்டுடன் வந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலர் நேற்று திருச்சியில் பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

"திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி, ஐயன், பெருவளை உள்ளிட்ட வாய்க்கால்கள் தண்ணீரின்றி வறண்டுள்ளன. 

இந்த நிலையில் இந்த வாய்க்காலை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகளுக்கு கூட போதுமான தண்ணீர் வசதி இல்லை என்றும், முக்கொம்பு மேலணையில் தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கால்நடைகளுக்காக வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும்" என்றும் கோரி இந்த போராட்டம் நடைப்பெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பசு மாடு ஒன்றை அழைத்து வந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவலாளர்கள் விரைந்து வந்தனர். மேலும் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். இதையடுத்து போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, "வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.

அதன்பின் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அங்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ராஜாமணியை சந்தித்து கோரிக்கை தொடர்பாக முறையிட்டு மனு கொடுத்தனர்.

அதன்பின்னர், ஐயாக்கண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. இதுகுறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். 

முக்கொம்பு மேலணையில் தற்போது தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வாய்க்கால்களில் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிட்டால் ஆடு, மாடு கால்நடைகளின் குடிநீர் தேவைக்காவது பயன்படும். அதனால்தான் அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளோம்” என்று அவர் கூறினார்.

விவசாயிகள் அழைத்து வந்த மாட்டுக்கு சாப்பிட துண்டுபிரசுரங்களை கொடுத்தனர். மேலும் வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை கொடுத்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!