
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளக்கப்பட்டிருக்கும் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர்தான் சம்பா சாகுபடிக்கான முக்கியமான நீராதாரமாக விளங்குகிறது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் சம்பா சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். இதன் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன் ஆகியோர் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டனர். வினாடிக்கு 2000 கன அடியாக திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், இன்று இரவுக்குள் வினாடிக்கு 15000 கன அடியாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த விவசாயிகள், டெல்டா மாவட்டங்களின் கடைமடை வரை தண்ணீர் வந்தடைவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.