வணிகர்கள் அனைவரும் இனிமேல் தினமும் மெயில் பார்க்கணும் - வணிக வரித்துறை இணை ஆணையர் பேச்சு…

First Published Jul 14, 2017, 9:05 AM IST
Highlights
Merchants will see Mail everyday - Associate Commissioner of Business Taxes


திருச்சி

ஜி.ஏ.ஸ்.டியின் விற்பனை படிவத்தை இணையத்தில் தாக்கல் செய்வதால் ஜி.எஸ்.டி குறித்த விவரங்கள் அனைத்தும் வணிகர்களுக்கு இ.மெயிலில் தான் வருமாம். அதனால், வணிகர்கள் அனைவரும் தினமும் மெயில் பார்க்க வேண்டும்” என்று வணிக வரித்துறை இணை ஆணையர் பேசினார்.

வணிகவரித் துறை திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட காந்தி சந்தை, உறையூர், பாலக்கரை-1, 2 ஆகிய நான்கு சரகத்திற்கு உட்பட்ட வியாபாரிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று திருச்சியில் நடைப்பெற்றது.

திருச்சியில் உள்ள ஒரு விடுதியில் நடந்த இந்த முகாமிற்கு திருச்சி கோட்ட வணிக வரித்துறை இணை ஆணையர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியது:

“சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வணிகர்கள் இனி விற்பனை படிவம் உள்ளிட்ட பல்வேறு படிவங்கள் தாக்கல் செய்ய தேவையில்லை. அதற்கு பதில் ஒரே விற்பனை படிவத்தை வலைத்தளத்தில் தாக்கல் செய்தால் போதும்.

இந்தப் புதியச் சட்டம் மூலம், வரி மீது வரி விதிக்கும் முறை அகற்றப்பட்டுள்ளது. வணிகர்கள் ஒவ்வொரு மாதமும் விற்பனை படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை விற்பனை படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டிற்குள் ஒரு வருடத்திற்கு ரூ.75 இலட்சத்திற்குள் வணிகம் செய்பவர்கள் ஒரு சதவீதம் வரி செலுத்தினால் போதும். அதேபோன்று ரூ.20 இலட்சத்திற்கு மேல் வருடத்திற்கு விற்பனை செய்யும் வணிகர்கள் மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவு செய்தால் போதுமானது. சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் புதிதாக பதிவு செய்வதற்கு, பதிவு சான்று கட்டணம் இல்லை.

வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள பெயர், செல்போன் எண்ணைத்தான் புதிய பதிவு சான்று பெற கொடுக்க வேண்டும். இந்த புதிய வரி செலுத்தும் முறை குறித்து அவரவர் ஆண்ட்ராய்டு செல்போனில் பிளே ஸ்டோரில் சென்று ஜி.எஸ்.டி., ரேட்பைண்டர் என டவுன்லோடு செய்து அதன் மூலம் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த புதிய வரிச்சட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதால் அன்று முதல் இந்தியா முழுவதும் இருந்த சோதனை சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. வேறு மாநிலத்திற்கு பொருட்கள் விற்பனை செய்யும்போது எந்த மாநிலம் என்று குறிப்பிட வேண்டும்.

ஜி.எஸ்.டி குறித்த விவரங்கள் அனைத்தும் வணிகர்களுக்கு இ.மெயிலில் தான் அனுப்பப்படும். எனவே, வணிகர்கள் அனைவரும் தினமும் மெயில் பார்க்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து வணிகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இதில் துணை ஆணையர் சாந்தி, உதவி ஆணையர்கள் சத்தியபிரியா, கயல்விழி, பரிமளாதேவி, ஹேமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

click me!