
திருமானூர்,
தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல 60 வயதை கடந்த அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகே சமூக ஆர்வலர்கள் சார்பில் சமூக ஆர்வலர் பாளை. திருநாவுக்கரசு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சமூக ஆர்வலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், மல்லிகை சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“வீடு, நிலம் மற்றும் மகன் உள்ள முன்னாள் அரசு அதிகாரிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதை போல முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.
பெரிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் 60 வயதை கடந்த அனைவருக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என கூறியது போல் தர வேண்டும்.
சட்டத்தை காண்பித்து வழங்கிய உதவித்தொகையை தள்ளுபடி செய்வதும், புதிய 60 வயது முடிந்த முதியவர்களுக்கு உதவித்தொகை தர மறுக்கும் சட்டத்தை நீக்க வேண்டும்.
வேலையின்றி தவிக்கும் அன்னிமங்கலம் பாளையபாடி அரண்மனைக்குறிச்சி கிராமமக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்த போராட்டத்தில் திருமானூர் யூனியன் முன்னாள் தலைவர் கருப்பையா, அரியலூர் இலக்கிய கலியபெருமாள், நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தை சேர்ந்த வரதராஜன், கணேசன், பஞ்சநாத கணபதி, வக்கீல்கள் பாக்கியராஜ், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.