தவறான மருந்து கொடுத்ததால் அம்மா உணவக காவலாளி பரிதாப பலி - மெடிக்கல் உரிமையாளர், ஊழியர் கைது!

Asianet News Tamil  
Published : Jul 08, 2017, 10:08 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
தவறான மருந்து கொடுத்ததால் அம்மா உணவக காவலாளி பரிதாப பலி - மெடிக்கல் உரிமையாளர், ஊழியர் கைது!

சுருக்கம்

medical shop owner arrested for giving wrong medicines

ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்க்கான மாத்திரையை மாற்றி தவறாக கொடுத்ததால், அம்மா உணவக காவலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மெடிக்கல் ஷாப் உரிமையாளர், ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எண்ணூர் அருகே எர்ணாவூர் குப்பத்தை சேர்ந்தவர் ராமன் (55). சென்னை ராயபுரம் அருகே கல்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவன சார்பில் அம்மா உணவகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த மாதம் 5ம் தேதி ராமனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தது. அங்கு 2 நாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இதையடுத்து அவருக்கு தேவையான மாத்திரைகளை, திருவொற்றியூர் தேரடி அருகே உள்ள சாந்தி மெடிக்கல் என்ற கடையில் வாங்கினார். அந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தார். கடந்த 13ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதித்தது. இதனால், மீண்டும் நங்கநல்லூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால், குணமாகவில்லை. பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமன், கடந்த 22ம் தேதி இறந்தார்.

மருத்துவமனையில் நல்லமுறையில் சிகிச்சை அளித்து, ராமன் எப்படி இறந்தார் என அவரது மகன்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள் எழுதி கொடுத்த மாத்திரை, மருந்துகளுக்கு பதிலாக, தவறான மாத்திரைகளை சாப்பிட்டதால் உடல்நிலை பாதித்து இறந்தார் என கூறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் 11வது நாள் சடங்கு நடந்து முடிந்தது. அதன்பின்னர், டாக்டர், ராமனுக்கு எழுதி கொடுத்த மருந்து சீட்டு, சாந்தி மெடிக்கலில் வாங்கிய மருந்துக்கான பில்லை, ராமனின் மகன்கள் சோதனை செய்தனர். அப்போது, ராமனுக்கு எழுதி கொடுத்த மருந்து சீட்டில் இல்லாததை மாற்றி, தவறான மருந்தை கடைக்காரர் கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருந்து கடை உரிமையாளர் பெரியார் நகரை சேர்ந்தவா பழவேசம் (60), கடை ஊழியர் திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த சுரேஷ் (20) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

இதில், ஊழியர் சுரேஷ் 10ம் வகுப்பு மட்டுமே படித்து இருப்பது தெரியவந்தது. மருந்து மாற்றி கொடுத்ததால், நோயாளி இறந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னை பகுதியில் உள்ள பெரும்பாலான மெடிக்கல் ஷாப்களில் பி.பார்ம் படிப்பு படிக்காதவர்களே வேலை பார்க்கின்றனர். குறிப்பாக குறைந்த சம்பளத்தில் 7 முதல் 10ம் வகுப்பு வரை படித்தவர்களை கடைக்காரர்கள் வேலையில் சேர்க்கின்றனர். இதனால், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.

டாக்டர்களின் கையெழுத்து, கடையில் உள்ள ஊழியர்களுக்கு சரிவர தெரிவதில்லை. அதனால், மாத்திரைகளை மாற்றி கொடுத்து உயிர்பலி ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சென்னை மாநகராட்சி, சுகாதார துறை, மெடிக்கல் கவுன்சில் ஆகியவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!