
மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் இன்று வெளியிட்டார். நீட் தேர்வு அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்த தரவரிசைப் பட்டியலில் ஓசூரைச் சேர்ந்த மாணவர் சந்தோஷ் முதலிடம் பெற்றுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி, பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. நீட் தேர்வு அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் இன்று வெளியிட்டார்.
நீட் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலில் ஓசூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவன், 656 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த முகேஷ் கண்ணா, 655 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். திருச்சியைச் சேர்ந்தவர் சயத் அபீஸ் 654 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.