தருமபுரம் ஆதினம் வழக்கில் திடீர் திருப்பமாக திருக்கடையூர் விஜயகுமாருக்கு எந்த தொடர்பும் இல்லை என புகாரார்தாரர் விருத்தகரி தெரிவித்துள்ளார்
மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், தருமபுரம் ஆதினம் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 25ஆம் தேதி புகார் மனு அளித்தார்.
அதில், “தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் சேர்ந்து செல்போன் மூலமும், வாட்ஸப் மூலமும் தொடர்பு கொண்டு, தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆடியோ வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக செம்பனார்கோயில் தனியார்(கலைமகள்) கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் க.அகோரம், திருக்கடையூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், வினோத், விக்னேஷ் ஆகியோர் தொடர்பு கொண்டு, கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்று கூறினர். எனவே தொடர்புடையோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகா சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை: 9 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் சித்தராமையாவிடம் ஒப்படைப்பு!
இதையடுத்து புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், திருக்கடையூர் விஜயகுமார் என்பவர் தனக்கு உதவியவர் எனவும், தனக்கு உதவி செய்ததை தவிர இந்த வழக்கில் அவருக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை எனவும் புகாரார்தாரர் விருத்தகரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விருத்தகரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “வணக்கம், நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் பெயரில் காவல் துறை தக்க நடவடிக்கை எடுத்தமைக்கு காவல் துறைக்கு மிகவும் நன்றி. இதில் திருக்கடையூர் திரு. விஜயகுமார் என்பவர் எனக்கு இந்த பிரச்சினை விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தவர் ஆவார். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கய நபர்களிடம் விஜயகுமார் பேசி, பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள முயற்சி எடுத்தார். அது பலன் அளிக்கவில்லை.
அதனால் விஜயகுமார், அந்த நபர்கள் ரவுடிகளாக இருப்பதால் காவல்துறையை நாடுவது மிகவும் நல்லது என அவர் கூறிய அறிவுரையினாலும், ஆலோசனையின் பெயரிலே நான் காவல் துறையை அனுகி உதவியை நாடினேன். எங்களுக்கு உதவி செய்தது தவிர விஜயகுமாருக்கு இந்த வழக்கில் வேறு எந்த தொடர்பும் இல்லை.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.