
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 21 கிராமமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலநிலை இருந்தது. ஆனால் இந்தமுறை கடலோர டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துவருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 961 ஏரிகள் உள்ளன. அவற்றில், காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 21 கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.20 அடியில், 21 அடிக்கு மேல் எட்டிவிட்டது. ஏரியின் முழு கொள்ளளவை எட்டினால் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்படும். இதனால் ஏரிக்கரையை ஒட்டியுள்ள கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முன்னூத்திகுப்பம், தச்சூர் உள்ளிட்ட 21 கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மதுராந்தக ஏரியை அமைச்சர்கள் அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், 23.20 அடி முழு கொள்ளளவு கொண்ட மதுராந்தகம் ஏரி தற்போது 21.6 அடி நிரம்பியுள்ளதாகவும் ஏரி நிரம்பினால் உபரிநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் எனவும் தெரிவித்தார். ஏரியை ஒட்டியுள்ள 21 கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுக்காக்களில் 9 தாலுக்காக்கள் பாதிக்கப்பட்டவையாக கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளின் தலைமையில் மீட்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.