முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில், கட்சியினர் யாரும் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று என்.சங்கரய்யாவை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.
பட்டாசு வெடித்து சிறுமி உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து அவரை கவனித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக, சுதந்திரப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கவுர டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.