கொள்ளையடிக்கப்பட்ட 1400 ஆண்டு பழமையான மரகத லிங்கம் மீட்பு - 2 பேர் கைது!!

First Published Jul 3, 2017, 10:38 AM IST
Highlights
maragathalingam smuggled in thiruporur got rescued


திருப்போரூர் அருகே 1400 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலில் இருந்து திருடப்பட்ட மரகத லிங்கத்தை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே இள்ளலூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சுயம்பீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், கற்பகாம்பாள் உடனுறை சுயம்பு ஈஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 3 ஐம்பொன் சிலைகளும், மரகதத்தால் ஆன லிங்கம் ஒன்றும் இருந்தது.

தமிழக அரசின் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் தினமும் சென்று தரிசனம் செய்வார்கள். காலை மற்றும் மாலை வேளைகளில் அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனைகள் நடந்து வருகிறது.

கடந்த 23ம் தேதி கோயிலில் பூஜைகள் முடிந்தவுடன், பூசாரி கோயிலை பூட்டி கொண்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கோயிலை திறக்க வந்தபோது,கோயில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மரகத லிங்கத்தின் மேல் பகுதியைப் பெயர்த்து மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள், தங்களது கைரேகை பதியாமல் இருக்க கோயில் தாழ்ப்பாளில் எண்ணையை ஊற்றிவிட்டுச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஐம்பொன் சிலைகள் தப்பியது.

புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்ட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

தனிப்படை போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சில நாட்களுக்கு முன் இள்ளலூர் கிராமத்துக்கு 2 பேர் சென்றனர். கோயிலுக்கு நன்கொடை செய்வதாகவும், கோயிலின் வரலாறு குறித்தும் கேட்டறிந்துள்ளனர். அப்போது, இங்குள்ள லிங்கம் மரகதத்தால் ஆனது என்ற தகவலை, பொதுமக்கள் அவர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, விரைவில் நன்கொடை தருவதாகக் கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

இதையடுத்து, இரவு நேரத்தில் 2 பேர், கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமாக சுற்றி வந்ததாக தெரிகிறது. பொதுமக்கள், அவர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் வந்த பைக்கை போட்டுவிட்டு தப்பி சென்றனர். அந்த பைக் திருப்போரூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் குழு அமைத்து, இரவு நேரங்களில் கோயிலுக்கு காவல் இருந்தனர். கடந்த 23ம் தேதி இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், காவல் பணிக்கு யாரும் செல்லவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பறயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் மரகத லிங்கத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், சுயம்பீஸ்வரர் கோயிலில் இருந்த மரகத லிங்கத்தை திருடியது கேளம்பாக்கம் அருகே உத்தண்டியை சேர்ந்த ரமேஷ் (23), மன்னார்குடியை சேர்ந்த அருள் (38) ஆகியோர் என தெரிந்தது. அவர்களை நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, மரகத லிங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 2 பேரையும், போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர். இதேபோல் இவர்கள் வேறு எங்காவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளர்களா, இவர்களின் பின்னணியில் யார் உள்ளனர், லிங்கத்தை கடத்தி யாருக்கு விற்பனை செய்ய இருந்தனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

click me!