MGM குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை... பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!!

Published : Jun 15, 2022, 09:53 PM IST
MGM குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை... பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!!

சுருக்கம்

MGM குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

MGM குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. MGM குழுமத்திற்கு சென்னை ஈ.சி.ஆர்-இல் உள்ள எம்.ஜி.எம் பொழுதுபோக்கு பூங்கா, எம்.ஜி.எம். ரிசார்ட், மதுபான தொழிற்சாலை மற்றும் திண்டிவனம், காஞ்சிபுரம், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, ஆந்திரா உள்பட தமிழகம் முழுவதும் நிறுவனங்கள் உள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எம்.ஜி.முத்து சென்னை துறைமுகத்தில் கூலி வேலையாக பணியில் சேர்ந்து தனது அயராத உழைப்பால் தொழிலதிபராக உயர்ந்தார். எம்.ஜி.முத்து இறப்புக்கு பிறகு அவரது மகன் நெசமணி முத்து தனது MGM குழுமத்திற்கு தற்போது இயக்குநராக உள்ளார். அவரது காலத்தில் தான் எம்.ஜி.எம்.குழுமம் ரியல் எஸ்டேட், மதுபான தொழிற்சாலை, நட்சத்திர ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து துறைகளிலும் கால் பதித்து அசுர வளர்ச்சியடைந்தது. இந்த குழுமம் கடந்த 2 ஆண்டுகளாக தங்களது வருமானத்தை மத்திய அரசுக்கு சரியாக கணக்கு காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை சார்பில் எம்.ஜி.எம் குழுமத்திற்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தங்களது குழுமம் சார்பில் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து எம்.ஜி.எம்.குழுமத்திற்கு சொந்தமான பொழுது போக்கு பூங்கா, ரிசாட்டுகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலை, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், எம்.ஜி.எம். குழுமத்தின் இயக்குநர் நெசமணி முத்து வீடு, அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் வீடுகளில் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள MGM பொழுது போக்கு பூங்காவில் காலை முதல் பொதுமக்கள் யாரையும் பூங்காவிற்குள் நுழைய அதிகாரிகள் விடவில்லை. அதேபோல் உள்ளே பணியில் இருந்து ஊழியர்கள் யாரையும் வெளியே விடவில்லை. அதேபோல் எம்.ஜி.எம். குழுமத்திற்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.எம். குழுமத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான தொழிற்சாலை தலைமை அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசாட்டுகள், பெங்களூரு, ஆந்திராவில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் அதன் இயக்குநர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், நெல்லை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள நிறுவனங்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூரூ, ஆந்திராவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என MGM குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததற்கான முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு தீவுகளில் உள்ள முதலீடுகள் குறித்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுது போக்கு பூங்காவில் இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்கள் கணினியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர ரொக்க பணம், தங்க நகைகள், மதுபான தொழிற்சாலையின் வரவு மற்றும் செலவு கணக்குகள் அனைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது கணக்காய்வு செய்து வருகின்றனர். இந்த கணக்காய்வு செய்த பிறகு தான் எம்.ஜி.எம். குழுமம் எத்தனை கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தது என்று தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!