ஆவின் பாலை பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ள சந்தையில் விற்றால் பால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ள பாதிப்பால் மக்கள் அவதி
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அடிப்படை தேவையான உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் நிவாரண உதவிக்காக மக்கள் ஏங்கி தவிக்கின்றனர். இந்தநிலையில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரால் பல இடங்களில் இன்னும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. மழை நீரை அகற்றும் பணியானது தொடர்கிறது. இருந்தபோதும் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
undefined
பால் பாக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முக்கிய தேவையான பால் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பல கடைகளில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பால் பாக்கெட் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு பால் விநியோகம் செய்ய மொத்தமாக பால் பாக்கெட்டை வாங்கி செல்வதால் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையல் பால் விநியோகம் சீராக இருப்பதாகவும், தேவைகேற்ப பால் வழங்கப்படும் என பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பால் முகவர் உரிமம் ரத்து
இது தொடர்பாக எக்ஸ் தள பதிவில், தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் வினியோகிக்கப்பட்டுள்ள நிலையில் ஆவின் பாலை பொது மக்களுக்கு வழங்காமல் கள்ள சந்தையில் விற்கவோ அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு முகவர் உரிமமும் ரத்து செய்யப்படும் என மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
பால் பாக்கெட் கூட தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யவில்லை: அன்புமணி ராமதாஸ் வேதனை