போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து ஆள் கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேர் கைது!

First Published Apr 2, 2018, 11:32 AM IST
Highlights
Man Kidnapping ..! Five arrested including the girl


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்போல் உடைணிந்து ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கடத்தப்பட்ட தொழிலதிபரை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் சோமசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் உலகநாதன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி அன்று இவர் வீட்டில் இருந்தபோது, பெண் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் போல வேடமணிந்த ஒரு பெண் மற்றும் காக்கி உடை அணிந்த 8 பேர் வந்துள்ளனர். அவர்கள், உங்கள் மீது புகார் வந்துள்ளது, அது குறித்து விசாரிக்க போலீஸ் நிலையத்துக்கு வரும்படி கூறியுள்ளனர்.

போலீஸ் நிலையம் வர ஒப்புக் கொண்ட உலகநாதன், அவர்கள் கொண்டு வந்த காரில் ஏற மறுத்து தன்னுடைய காரில் ஏறிச்சென்றார். இதன் பின்னர் உலகநாதன், தேனி ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுபலாபுரம் விலக்கு என்ற இடத்தில் அடைத்து வைக்கப்பட்டார். அப்போதுதான் அவருக்கு தான் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, உலகநாதன் செல்போனில் இருந்து அவரது வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு போன் செய்து, உலகநாதனின் மனைவி விஜயலட்சுமியிடம் 10 லட்சம் ரூபாய் தராவிட்டால் உலகநாதனை கொலை செய்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர். பணத்தை 31 ஆம் தேதி மதியத்துக்குள் பாண்டிகோயிலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அச்சமடைந்த விஜயலட்சுமி, சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்குத் தகவல் கொடுத்தார். அவருடைய உத்தரவின்பேரில் சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் தலைமையில் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் சப் இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித், ராமசந்திரன், ஏட்டுகள் பாண்டியராஜன், மருதுபாண்டியன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதன் பின்னர் அவர்கள், விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பாண்டிகோயில் சென்றனர். பின்னர் தனிப்படை போலீசார், தனித்தனியாக பிரிந்து நின்றனர். அப்போது உலகநாதனைக் கடத்தியவர்களில் ஒருவர், விஜயலட்சுமியிடம் பணத்தை வாங்க வந்தார். அவரைப் பார்த்த விஜயலட்சுமி தன் கணவரைக் கடத்திச் சென்றவர் இவர்தான் என்று அடையாளம் காட்டினார். உடனே போலீசார் அந்த நபரை மடக்கிப்பிடிதது விசாரித்தனர்.  அவர் கொடுத்த தகவலின்பேரில், கடத்தப்பட்ட உலகநாதனை மீட்டனர்.

பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து மதுரை காளவாசலைச் சேர்ந்த சூரியபிரகாஷ், மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த சாந்தி, பெரியகுளம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த காசிமாயன், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த அகஸ்டீன், ஆண்டிப்பட்டி ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சேகர் சிலம்பரசன், தேனியைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

click me!